Kaadhal Enbathu Pothuvudaimai Movie Review :
காதல் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே தோன்றும் உணர்வு மட்டுமே என்று நம்மில் பலர் நினைக்கிறோம். ஆனால் ஒரு ஆண் மற்றொரு ஆண் மீது வைக்கும் காதல், ஒரு பெண் மற்றொரு பெண் மீது வைக்கும் காதல் என்ற அதிகம் பேசப்படாத ‘தன் பாலின ஈர்ப்பு’ காதலும் உண்டு. தன்பாலின ஈர்ப்பை சட்டங்கள் அங்கீகரித்திருந்தாலும் சமுதாயம் முழுமனதுடன் ஏற்றுக் கொள்வதில்லை.
இது போன்ற சமுதாய சிக்கல் கொண்ட கதையை மையமாக வைத்து ‘காதல் என்பது பொதுவுடைமை’ என்ற படத்தை இயக்கி உள்ளார் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். இப்படம் இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்கள் வரவேற்பை பெற்றுள்ளது. காதலர் தினத்தில் திரைக்கு வர உள்ளது.
சாம் (லிஜா மோல்), தான் ஒருவரை காதலிப்பதாக தன் அம்மாவிடம் (ரோகிணி) சொல்கிறார். அம்மா, “நீ விரும்பும் பையனை அழைத்து வா. நான் பேச வேண்டும்” என்கிறார். சாம் ஒருநாள் ஒரு பெண்ணை அழைத்து வந்து “இவள் பெயர் நந்தினி. நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். இவள் இனிமேல் இந்த வீட்டில் தான் இருப்பாள்,” என்கிறார்.
இதனால் கோபம் கொள்ளும் அம்மா, “இது இயற்கைக்கு முரண். ஏற்று கொள்ள முடியாது” என்கிறார். சாமுக்கு அறிவுரை சொல்லி திருத்த சில ஆண்டுளுக்கு முன் பிரிந்து சென்ற சாமின் அப்பாவை அழைக்கிறார். அப்பா வந்து சாம், நந்தினி இருவருக்கும் சில அறிவுரைகளை தருகிறார். இந்த அறிவுரைகளை கேட்டு நந்தினியும் சாமும் என்ன முடிவெடுத்தார்கள் என்பது ‘காதல் என்பது பொதுவுடைமை’ படத்தின் கதை.



