Lakshmikanthan kolai vazhakku Movie Review

1944 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த சி.என். லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கிற்கும், இந்த படத்திற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. கவன ஈர்ப்புக்காக இத்தகைய தலைப்பு வைத்திருக்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன், இப்படம் மூலம் மரண தண்டனையும் ஒரு விதத்தில் கொலை தான், என்ற விவாதத்தை முன் வைத்திருக்கிறார்.

குற்றவாளியின் சந்தர்ப்ப சூழ்நிலை மற்றும் குற்ற பின்னணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு நீதி வழங்க வேண்டுமே தவிர, வெறும் குற்றத்தின் அடிப்படையில், ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்படுவது நீதி அல்ல, என்பதை உரக்க சொல்வது தான் இப்படத்தின் மையக்கரு.

படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், வருமையில் சிக்கித்தவிக்கும் நாயகன் வெற்றி திருடுகிறார். வேலை கிடைக்கும் வரை அதையே தொழிலாக வைத்துக்கொண்டு பயணிக்கும் அவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலை குற்றவாளியாகிறார். வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதிக்கிறது. தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தன் குற்றத்திற்கான தண்டனையாக இருந்தாலும், அதன் மூலம் தனக்கான நீதி மறுக்கப்பட்டிருக்கும் வாதத்தை வெற்றி முன் வைக்கிறார். அவரது வாதம் சரியா ? தவறா ? என்பதை மனித உணர்வுகளின் அடிநாதத்தை தொடும் விதத்தில் சொல்வது தான் ‘லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’.

வெற்றியின் அலட்டல் இல்லாத, அளந்து கொடுத்த நடிப்பும், பதற்றம் இல்லாத வசன உச்சரிப்பும் திரைக்கதையில் இடம்பெறும் வாதங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. இறுக்கமான மனநிலையோடு இருந்தாலும், தனது கருத்துகளை தெளிவாக எடுத்துக்கூறும் வெற்றி, படம் முழுவதும் பேசிக்கொண்டு இருந்தாலும், அந்த காட்சிகளை சரியான முறையில் கையாண்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பிரிகிடா சாகாவுக்கு, கிராமத்து வேடம் சற்று ஒத்துப்போகவில்லை என்றாலும், எதார்த்தமான நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்தில் தன்னை பொருத்திக்கொள்ள முயற்சித்திருக்கிறார்.

சிறைச்சாலை அதிகாரியாக நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே, வெற்றியின் வாதத்திற்கு எதிர்வாதம் செய்யும் கதாபாத்திரத்தில் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வாதிடுவது ரங்கராஜ் பாண்டேவுக்கு மிக எளிதான பணி என்றாலும், அதை ஒரு கதாபாத்திரமாக கையாளும் சவாலை மிக சாமர்த்தியமாக கையாண்டிருப்பவர், தனது அளவான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கும், திரைக்கதை ஓட்டத்திற்கும் பெரும் பலமாகவே பயணித்திருக்கிறார்.

வெற்றியின் நண்பராக நடித்திருக்கும் மாறன், அம்மாவாக நடித்திருக்கும் லிஸி ஆண்டனி, தொழிலதிபர் லக்‌ஷ்மிகாந்தனாக நடித்திருக்கும் கவிதா பாரதி, வெற்றியை தூக்கிலிடும் ஹேங்மேனாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, கன்யா பாரதி, அருவி மதன் ஆகியோர் தங்களது கச்சிதமான நடிப்பின் மூலம் அந்த அந்த கதாபாத்திரமாகவே பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர்.

Pro: Rekha

Leave a Response