Pechi Review: டிரெக்கிங், அமானுஷ்யம் என்பதாக அந்த ஹாரர் ட்ரீட்மென்ட் ஓகே… ஆனா அந்த க்ளைமாக்ஸ்?!
கொல்லிமலை ‘அரண்மனை காடு’ பகுதிக்குச் சாகசப் பயணமாக டிரெக்கிங் செல்ல நண்பர்களான மீனா (காயத்ரி சங்கர்), சரண் (தேவ்), சாரு (ப்ரீத்தி), ஜெர்ரி (மகேஷ்வரன்), சேது (ஜனா) ஆகிய நால்வர் குழு முடிவெடுக்கிறது. அவர்களுக்கு வழித்துணையாக முன்னாள் வனக்காவலரும், உள்ளூர் வாசியுமான மாரி (பால சரவணன்) ஐந்தாவதாகக் குழுவில் இணைகிறார். மாரி தனது அனுபவத்தால் காடுகளில் இருக்கும் மிருக நடமாட்டத்தையும், தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழையக்கூடாது என்கிற எச்சரிக்கையையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறார். அது குழுவிலிருக்கும் சிலருக்கு எரிச்சலூட்ட, ஒரு எல்லைக்கு மேல் அவரது பேச்சைக் கேட்காமல் இருவர் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைகிறார்கள். இதற்குப் பின் என்ன நடக்கிறது, அந்தக் காட்டுக்குள் இருக்கும் அமானுஷ்ய சக்தி என்ன, இவர்கள் உயிருடன் காட்டைவிட்டு வெளியேறினார்களா, இல்லையா போன்ற கேள்விகளுக்கு விடை காண்பதே ‘பேச்சி’ படத்தின் கதை.
நாயகியாக காயத்ரி சங்கர், கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடித்து நம் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்கிறார். இவருக்குப் போட்டியாக “நாங்கள் அதற்கும் மேல” என்று ஜனா, சாரு கூட்டணி சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாத மேட்டிமைத்தன உணர்வைக் கச்சிதமாகக் கடத்துகிறது. ஆனால், இது அனைத்துமே ஆங்காங்கே செயற்கையான உணர்வையும் தந்துவிடுகிறது. அப்பாவித்தனமான நடிப்பில் மகேஷ்வரனும், பிரச்னையைப் புரிந்து கொள்ளும் விவேகமான பாத்திரத்தில் சரணும் இன்னுமே சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கலாம்.




