SATTAMUM NEEDHIYUM SERIES 2 REVIEW

குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் உண்மையிலேயே குற்றவாளியா என்பதைத் தீர்மானிப்பது யார்? சமூகமா அல்லது நீதிமன்றமா? குற்றம் சாட்டப்பட்டவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவருக்காக வாதாடும் உரிமை மறுக்கப்படலாமா? இப்படியான முக்கியமான கேள்விகளை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘சட்டமும் நீதியும் 2’ இணையத் தொடர்.

18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ள இந்தத் தொடரை, பிரதீப் மரியானுடன் இணைந்து எழுதி இயக்கியுள்ளார் பாலாஜி செல்வராஜ். பருத்திவீரன் சரவணன், வரலக்ஷ்மி சரத்குமார், லாவண்யா, கல்லூரி வினோத், ஆறு பாலா, பிரேம், கவிதா பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு வெளியான முதல் பாகத்தைத் தொடர்ந்து, அதே தயாரிப்பாளர், நாயகன், இயக்குநர் கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாவது பாகம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாவது பாகமும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறதா? என்பதைப் பார்க்கலாம்.

பார் கவுன்சில் தலைவராக இருக்கும் பிரபல பெண் வழக்கறிஞரின் (வரலக்ஷ்மி சரத்குமார்) கணவர், உயர் போலீஸ் அதிகாரி (பிரேம்) ஒருவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் உயிரிழக்கிறார். இந்த மரணம் தொடர்பாக ஆவடி காவல் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர், காவலர்கள் மற்றும் போலீஸ் வாகன ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்படுகின்றனர். ஆனால், தங்களுக்கும் அந்தக் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அவர்கள் மறுக்கின்றனர்.

உயிரிழந்தவர் பார் கவுன்சில் தலைவரின் கணவர் என்பதால், கைது செய்யப்பட்ட காவலர்களுக்காக எந்த வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது என்ற முடிவு எடுக்கப்படுகிறது. இந்தச் சூழலில், நோட்டரி பப்ளிக்காகப் பணியாற்றி வரும் நேர்மையான வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியை (சரவணன்), கைது செய்யப்பட்ட காவலர் ஒருவரின் மனைவி சந்திக்கிறார்.

மகளின் திருமணம் உள்ளிட்ட குடும்பப் பொறுப்புகளால் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் சுந்தரமூர்த்தியிடம், பணமும் அதிகாரமும் இல்லாதவர்களுக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்காதா என அவர் எழுப்பும் கேள்வி சிந்திக்க வைக்கிறது. அந்தப் பெண்ணின் கோரிக்கையை ஏற்று, காவலர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாட முன்வருகிறார் சுந்தரமூர்த்தி.

ஆனால், வழக்கை விசாரிக்கத் தொடங்கிய பிறகுதான் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவருகின்றன. உயிரிழந்த உயர் போலீஸ் அதிகாரியின் அதிகார அத்துமீறல்கள், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள், மனைவியுடனான கருத்து வேறுபாடுகள் என ஒவ்வொரு விஷயமும் வழக்கை வேறு திசைக்கு அழைத்துச் செல்கின்றன.

மறுபுறம், கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்களும் முழுமையான நல்லவர்களாக இல்லை என்பது தெரியவருகிறது. இந்தச் சிக்கல்களுக்கு மத்தியில் சுந்தரமூர்த்தியை வழக்கிலிருந்து விலகச் செய்ய மிரட்டல்களும் பண ஆசையும் காட்டப்படுகின்றன.

உண்மையில் நடந்தது கொலையா அல்லது தற்கொலையா? காவலர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையா? இந்த மரணத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மம் என்ன? இளம் உதவி வழக்கறிஞரான லாவண்யாவின் துணையுடன் சுந்தரமூர்த்தி உண்மையை வெளிக்கொண்டு வந்தாரா? என்பதே தொடரின் மீதிக்கதை.

RATINGS : 3/5

PRO : AIM SATHISH