விஜயகுமாரன் இயக்கத்தில் வடிவுக்கரசி, திலீபன், சிங்கம் புலி ஆகியோர் நடித்துள்ள க்ராணி படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
விஜய் மேரி யுனிவர்சல் மீடியா சார்பில் விஜயமேரி தயாரிப்பில், விஜயகுமரன் எழுதி இயக்கியிருக்கும் படம் தான் க்ராணி. இந்த படத்தில் வடிவுக்கரசி, திலீபன், சிங்கம்புலி, கஜராஜா, அனந்து, அபர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மணிகண்டன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, செல்லையா பாண்டியன் இசையமைத்துள்ளார். ஹாரர் மற்றும் திரில்லர் வடிவில் உருவாகியுள்ள இந்த படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கணவன் மற்றும் மனைவி தங்களது காது கேட்காத இரண்டு குழந்தைகளுடன் வெளிநாட்டிலிருந்து சொந்த கிராமத்திற்கு குடியேறுகின்றனர். ஐ டி வேலையை விட்டுவிட்டு கிராமத்தில் விவசாயம் செய்ய முயற்சி செய்கின்றனர். அப்போது அடையாளம் தெரியாத பாட்டி ஒருவர் அவர்களது வீட்டிற்கு வருகிறார்.
மறுபுறம் வாழத்தோப்பில் குழந்தை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இதயம் காணாமல் போகிறது. இந்த வழக்கை திலீபன் மற்றும் சிங்கம்புலி விசாரிக்கின்றனர். மறுபுறம் ஊர் முக்கியஸ்தர் ஒருவர் தான் எப்போதும் இளமையுடன் இருப்பதற்காக மாந்திரீக முயற்சிகளில் ஈடுபடுகிறார். இந்த மூன்று கதையும் ஒரு கட்டத்தில் ஒரே இடத்தில் ஒன்று சேருகிறது. அதன் பின்பு என்ன நடந்தது என்பதை ஹாரர் மற்றும் திரில்லர் வடிவில் சொல்லியிருக்கும் படம் க்ராணி.
நடிகர்கள் நடிப்பு
க்ராணி ஒரு வழக்கமான ஹாரர் படங்களை போல இல்லாமல், ஒரு வயதான பாட்டியை வைத்து பயத்தை காட்ட முயற்சி செய்துள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை வடிவுக்கரசிக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் கிடைத்துள்ளது.
முழுவதும் மேக்கப்புடன் அவர் என்றே தெரியாத ஒரு உருவத்தில் பயமுறுத்தி உள்ளார். 108 வயது முதியவராக அவரது உடல்மொழியும், மிரட்டலான பார்வையும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளன. இவருடன் திலீபன் புகழேந்தி, சிங்கம்புலி, கஜராஜ், ஆனந்த் நாக் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.
குறிப்பாக சிங்கம்புலியின் கதாபாத்திரம் எழுதப்பட்டிருந்த விதம் சிறப்பாக இருந்தது. அது கதையின் போக்கிற்கு தேவையான இடங்களில் கைகொடுக்கிறது.
தொழில்நுட்பம்
படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட், ஹாரர் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள கிராபிக்ஸ் மற்றும் பின்னணி இசை தான். செல்லையா பாண்டியனின் இசை சில இடங்களில் உண்மையிலேயே நம்மை இருக்கையின் நுனிக்கே கொண்டு செல்கிறது. ஒளிப்பதிவாளர் மணிகண்டன் அந்த பழைய வீட்டின் சூழலை மிகவும் தத்ரூபமாகவும் பயமுறுத்தும் வகையிலும் காட்டியுள்ளார். இருப்பினும், இரண்டாம் பாதியில் சில காட்சிகள் சற்று மெதுவாக நகர்வது போலவும், சில இடங்களில் வழக்கமான ஹாரர் டெம்ப்ளேட்கள் இருப்பது போலவும் உணர்வு ஏற்படுகிறது.
இந்த க்ராணி திரைப்படம் ஹாரர் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 108 வயது முதியவரை வைத்து ஒரு த்ரில்லர் கதையை எடுத்துள்ள இயக்குநரின் முயற்சி பாராட்டத்தக்கது. இப்படம், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு திகில் படமாக அமைந்துள்ளது. படத்தில் உள்ள சில குறைகளை தவிர்த்து பார்த்தால் க்ராணி நிச்சயம் பிடிக்கலாம்!
Ratings : 4/5
Pro: Aim Sathish



