‘ப்ராமிஸ் ‘ திரைப்பட விமர்சனம்
அருண்குமார் சேகரன்,
நதியா சோமு ,
சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், குணா, சுந்தரவேல்,கார்த்திக் ஸ்மித் ,ராஜா, டாக்டர் இவின், ராஜ்குமார்,கலைவாணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதாநாயகனாக நடித்துப் படத்தை இயக்கியுள்ளார் அருண்குமார் சேகரன். வினோத் குமார் பி.எஃப்.டி. ஒளிப்பதிவு செய்துள்ளார் .
சரவண தீபன் இசையமைத்துள்ளார்.பாடல்களைப் பாலா எழுதியுள்ளார் .
ஸ்ரீராம் விக்னேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
என்.நாகராஜ் பெருமையுடன் வழங்க
சங்கமித்ரன் புரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில்
நாராயண நாகராஜ் , அருண்குமார் சேகரன் தயாரித்துள்ளனர்.
சங்கமித்ரன் என்கிற மித்ரன் கல்லூரி மாணவி லட்சுமியைக் காதலிக்கிறான். அவன் ஒரு டைல்ஸ் விற்பனை நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். காதலில் விழுந்ததால் வேலையில் கவனம் இல்லாமல் இருக்கிறான். ஒழுங்காக வேலைக்குச் செல்வதில்லை.
லட்சுமியிடம் அவன் காதலைச் சொல்லத் தயங்கிக் கொண்டிருக்கிறான். நண்பர்கள் உந்துதலில் நெருங்கிக் கேட்கும் போது அவன் தன்னைக் காதலிப்பது தனக்குத் தெரியுமே என்கிறாள். அவன் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறான். பிறகு இருவரும் காதல் வானில் சிறகடித்துப் பார்க்கிறார்கள். டூயட் பாடுகிறார்கள் .லட்சுமி குடும்பத்தினருக்கு இதில் சம்மதம் இல்லை. இருந்தாலும் அவள் மித்ரன் தனக்கே சொந்தம் என்று நினைக்கிறாள்.
அவனுக்கு நண்பர்கள் மூலம் குடிப்பழக்கம் அறிமுகமாகிறது.
ஒரு நாள் லட்சுமி அவன் குடிப்பதைக் கண்டித்து இனிமேல் குடிக்கக் கூடாது என்று ப்ராமிஸ் செய்யச் சொல்லி சத்தியம் வாங்குகிறாள்.
ஒரு நாள் சில வாலிபர்கள் ஒரு பெண்ணைப் பாலியல் சீண்டல் செய்யும் போது மித்ரன் அந்தப் பெண்ணைக் காப்பாற்றி அவள் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். இதைத் தொலைவில் இருந்து பார்த்த லட்சுமி தவறாகப் புரிந்து கொள்கிறாள்.அவன் மீது கோபம் கொள்கிறாள்.இந்த நிலையில் விரக்தியுற்றவன், மேலும் குடிக்கிறான்.அவனுடன் பேசாமல் இருப்பதால் , தன்னை மறந்து விட்டாளோ என்று வருத்தப்படுகிறான்.அவளுக்கு வீட்டில் திருமண நிர்ப்பந்தம் நெருக்கிக் கொண்டிருக்கிறது.ஒரு நாள் தன் தோழியின் மூலம் மித்ரனை மலைக் கோயிலுக்கு வரச் சொல்கிறாள்.நண்பர்களுடன் அங்கே குழப்பத்துடன் செல்கிறான்.
ஆனால் எல்லா ஏற்பாட்டுடன் வந்த அவள் திடீரென மாலை மாற்றி தாலி கட்டச் சொல்கிறாள். மித்ரனும் இந்தத் திடீர் திருமணத்தில் சற்றே அதிர்ச்சி அடைந்தாலும் வேறு வழி இல்லாமல் தாலிகட்டி விடுகிறான். திருமணம் முடிந்து விடுகிறது. மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையில் லட்சுமி கருவுறுகிறாள்.
ஆனால் கணவன் மனைவி இருவருக்கும் மருத்துவ சோதனை செய்ததில் அவனுக்கு மட்டும் ஹெச்ஐவி பாசிட்டிவ் இருப்பது தெரிய வருகிறது. இதை எண்ணி அவன் அதிர்ச்சி அடைகிறான். வேறொரு பரிசோதனை செய்து சோதித்த போதும் அதே முடிவு தான் வருகிறது. தான் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்று மனம் உடைந்து போகிறான்.அவளிடமிருந்து விலகி இருக்கிறான். அவளிடம் இதைச் சொல்லத் தயங்குகிறான் .பிறகு அவள் வற்புறுத்திக் கேட்டதும் சொல்கிறான் .அதிர்ச்சி அடைந்த அவள், சற்றே அதில் இருந்து மீள்கிறாள்.ஒரு நிலையில் அவன் மீது ஒரு பரிவு வருகிறது.மருத்துவ சிகிச்சை செய்யலாம் என்று கூறுகிறாள்.
இதை அறிந்து கொண்ட லட்சுமியின் பெற்றோர் அவனுக்குத் தவறான தொடர்பால் தான் இது வந்தது என்று திட்டி அவமானப்படுத்துகிறார்கள்.அவள் விலைமாதிடம் சென்றது உண்மையா என்று அவனிடம் கேட்கிறாள் .அவன் தான் சென்றது உண்மை ஆனால் எதுவும் நடக்கவில்லை என்கிறான்.அவள் மிகவும் வருத்தப்படுகிறாள்.ஒரு கட்டத்தில் பெற்றோர் அவளைப் பிரித்து அழைத்துச் செல்கின்றனர்.
லட்சுமி வயிற்றில் உள்ள கரு கலைக்கப்படுகிறது. மித்ரன் அவளைச் சந்திக்க விடாமல் தடுக்கின்றனர். தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனவன் , அவளுக்கு வீடியோவில் பேசி ஒரு மெசேஜ் அனுப்புகிறான். அதில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு ப்ராமிஸ் செய்கிறான்.
”அடுத்த பிறவியில் உனக்கு மகனாக நான் பிறப்பேன். பிறக்கும் குழந்தைக்கு என் பெயரை வைத்து விடு . நீ இதைப் பார்க்கும் போது நான் உயிருடன் இருக்க மாட்டேன்”என்று பேசி வீடியோ அனுப்பி விடுகிறான்.அதிர்ச்சி அடைந்தவள் அவனைப் பார்க்க ஓடிய போது அவனை உயிரற்ற உடலாகத்தான் பார்க்க முடிந்தது.இதற்குப் பிறகு இந்தக் கதை எப்படிச் செல்கிறது என்பதைச் சொல்கிற படம் தான் ‘ப்ராமிஸ்’.
இந்தப் படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் அருண்குமார் சேகரன் சங்கமித்ரன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சுமாரான தோற்றம் சுமாரான உடல்மொழி என்றாலும் அந்தப் பாத்திரத்திற்கு தன்னைப் பொருத்திக் காட்டியுள்ளார்.
நடுத்தர வர்க்கத்து அல்லாட்டங்களையும் தடுமாற்றங்களையும் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு நடிகர் நடித்தது போலத் தெரியாமல் தன்னால் முடிந்த அளவிற்கு முக பாவனைகள் காட்ட முயற்சி செய்துள்ளார்.
குறிப்பாகக் குடிக்கும் காட்சிகளில் எச்ஐவி வந்த பிறகு வருத்தப்படும் காட்சிகளில் அவருடைய நடிப்பு கவனிக்க வைக்கிறது.
கதாநாயகி லட்சுமியாக நடித்துள்ள நதியா சோமு திராவிட முகத்தில் இருந்தாலும் ஆரம்பத்தில் சுமாரான முக பாவனைகள் காட்டினாலும் போகப் போக கதையின் தீவிரத்தில் தனது நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்தக் கதையில் துணைக் கதாபாத்திரங்களில்
சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், குணா, சுந்தரவேல்,கார்த்திக் ஸ்மித் ,ராஜா, டாக்டர் இவின், ராஜ்குமார்,கலைவாணி போன்றோர் நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகனின் நண்பர்களாக வருபவர்கள், கடை முதலாளி, நாயகனின் தாய் தந்தை, நாயகியின் தாய் , எதிர்மறைப் பாத்திரத்தில் லிங்கேஸ்வரனாக நடித்திருப்பவர் என அனைவரும் மண்ணின் மைந்தர்கள் போல் தெரிகிறார்கள். ஆபத்துக்கு கிடைத்த அவர்களைப் பயன்படுத்திக் கொண்டது போல் உள்ளது .
இந்தக் கதை வேலூர் மாவட்டத்தில் நடக்கிறது. எனவே அந்த வேலூரின் வெம்மை பூமியையும் இருப்புப் பாதைகளில் ரயில் செல்வதையும் காட்டி அந்த நிலக்காட்சியை நம்மை உணர வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் வினோத் குமார். இசையமைப்பாளர் தீபச்செல்வனின் இசையில் பாடல்கள் புரிகிற வரிகளில் உள்ளது பெரும் ஆறுதல்.குறிப்பாக ‘தேன்மழை சாரலே ‘, ‘உதிர்கிறேன் நானடி ‘பாடல்கள் கவனிக்க வைக்கின்றன.
முடிந்தவரை தொய்வில்லாமல் காட்சிகளைத் தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர்
ஸ்ரீராம் விக்னேஷ்.
படத்தில் புகைப்பிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகள் அதிக இடங்களில் வருவதைத் தவிர்த்து இருக்கலாம்.
மது போதையில் திடீர் முடிவெடுக்கும் மனநிலை கொண்டு செல்லும் ஆபத்தைப் பற்றி இந்தப் படத்தில் கூறியிருக்கிறார்கள் .வாக்கு கொடுப்பவர்கள்,
சத்தியம் செய்பவர்கள் அதைக் காப்பாற்ற வேண்டும்.
எதற்கெடுத்தாலும் ப்ராமிஸ் ப்ராமிஸ் என்று சத்தியம் செய்வது பெரிதல்ல. அதைக் காப்பாற்றுவதில் பொறுப்பு உள்ளது என்பதை உணரும் வகையில் காட்சிகள் உள்ளன.
மித்ரனுக்கு எப்படி எச்ஐவி வந்தது என்பதற்கான தெளிவான விளக்கம் இல்லாமல் இருக்கிறது. விலை மகள் வீட்டுக்குச் சென்று இருந்தாலும் அங்கு எந்தத் தொடர்பும் ஏற்படவில்லை என்றாலும் எச்ஐவி எப்படி வந்தது என்பதற்கான தெளிவான விடை இல்லை.
குடும்பத்தில் நிகழும் முக்கியமான முரண்பாட்டு மோதல்களின் போது கதாநாயகனின் பெற்றோர்கள் எங்கே சென்றார்கள்? அவர்களது பதில் வினை என்ன என்பதைச் சரியாக காட்டவில்லை.
மொத்தத்தில் குடிப்பழக்கத்தின் விளைவுகளையும் அவசர முடிவுகள் தரும் ஆபத்தையும் மனம்விட்டுப் பேசாத மனநிலை தரும் சிக்கல்களையும் எளிய முறையில் இந்தப் படத்தில் கூறி இருக்கிறார்கள் என்று கூறலாம்.
Ratings : 4/5
Pro : Sakthi Saravanan




