தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு போராட்டம் வென்றது

UPI பரிவர்த்தனையில் 0.4 சதவீதம் சேவை கட்டண வரிவிதிப்பை மத்திய அரசு அறிவித்தற்கு, எதிர்ப்புத் தெரிவித்து, 12.10.2026 காலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. அன்று மாலையில் மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை மாநிலத்தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, புதுடெல்லியில் நேரில் சந்தித்து UPI பரிவர்த்தனைக் கட்டணத்தைத் திரும்பப்பெறக் கோரியும், ஈரடுக்கு ஜி.எஸ்.டியை வரிச்சட்டங்களில் உள்ள வணிகர்களுக்கு எதிரான சட்டப்பிரிவுகளை தளர்த்திடக் கோரியும் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தார்.

மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் அவர்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும் யு.பி.ஐ கட்டணத்தை திரும்பப்பெற ஆலோசித்து, நல்லதொரு முடிவினை விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்த நிலையில், இன்றே யு.பி.ஐ. சேவை கட்டண வரிவிதிப்பைத் தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திருமிகு. விக்கிரமராஜா அவர்கள் கூறியதாவது:-

உடனடியாக நான் டெல்லிக்குச் சென்று மத்திய நிதி அமைச்சரைச் சந்தித்தேன். மாண்புமிகு மத்திய அமைச்சரிடம் UPI பரிவர்த்தனைக் கட்டணத்தைத் திரும்பப்பெறக் கோரியும், ஈரடுக்கு ஜி.எஸ்.டியை வரிச்சட்டங்களில் உள்ள வணிகர்களுக்கு எதிரான சட்டப்பிரிவுகளை தளர்த்திடக் கோரியும் கோரிக்கைகளை வைத்தோம். ஏற்கனவே விலைவாசி உயர்ந்திருக்கிறது. மேலும் விலைவாசி உயர்ந்துவிடக்கூடாது. யுபிஐ பரிவர்த்தனை மீதான வரியை, வியாபாரிகள் தான் கட்ட வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். எப்படியாவது அதைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினோம். மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும் இன்முகத்தோடு நம் கோரிக்கைகள் எல்லாம் கேட்டு, கட்டாயமாக இந்தியப் பிரதமரோடு கலந்து, நல்ல முடிவை நான் அறிவிப்பேன் என்று சொன்னார்கள்.

காலையில் போராட்டம் நடத்தினோம் மாலையில் அமைச்சரைச் சந்தித்தோம். மறுநாள் காலையில் மகிழ்ச்சியடைந்தோம். அந்தச் சட்டம் நிறுத்திவைக்கப்பட்டு வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் வகையில், வரிவிதிப்பை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று, மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் அவர்களை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

சட்டம் நிறுத்தி வைக்கப்பட்ட செய்தி அறிந்து, தமிழ்நாடு முழுவது உள்ள இலட்சோப இலட்ச வியாபாரிகள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் அவர்களுக்கு நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.

கடந்த 43வது மாநில மாநாட்டில் நாம் வைத்திருந்த, சட்ட விதிகளை எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் கைது நடவடிக்கைகள் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்று, கைது செய்யும் நடவடிக்கை இல்லை என்று கூறியிருக்கிறார்கள், மேலும் பல்வேறு கோரிக்கைகளை கொடுத்து வலியுறுத்தி இருக்கிறோம். குறிப்பாக G.S.T- யின் நான்கு கட்ட வரியை இரண்டு கட்டவரியாக குறைத்திருக்கிறார்கள். நாம், இது ஒருமுறை வசூலிக்கும் வரியாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, வலியுறுத்தி இருக்கிறோம். ஆகவே தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரமைப்பு மூலமாக அகில இந்தியா முழுவதும் இந்த சூழலில் வியாபாரிகளுக்கு ஒரு பாதுகாப்பு வளையமாக, இன்று மத்திய அரசு செய்தி வெளியிட்டிருப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். மத்திய நிதி அமைச்சருக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நன்றியைத் தெரிவித்துக் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *