99/66 MOVIE REVIEW

99/66 MOVIE REVIEW :

வித்தியாசமான ஒரு அமானுஷ்யக் கதை. இதுவரை நாம் பார்த்திருக்கும் அமானுஷ்ய படங்களில் எல்லாம் ஒரு கட்டடத்திற்குள் ஒரு ஆத்மா புகுந்துவிட்டு அனைவரையும் ஆட்டிவைக்கும்.

கடைசியில் அந்த ஆத்மாவின் பழிவாங்கல் முடிந்தவுடன் அங்கிருந்து அகன்று விடும்.

இந்தப் படத்தில் நாயகி ரக்ஷிதா மகாலட்சுமி தன் காதல் கணவன் சபரியுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறுகிறார். அங்கே இன்னொரு பிளாட்டில் வசிக்கும் ஸ்வேதா அவருக்கு முதல் தோழியாக அறிமுகமாகிறார்.

ஆனால், ஒரு பக்கம் சபரி ரக்ஷிதாவை இயற்கையாக இறந்தது போல கொல்ல பல வகையிலும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் இந்த கட்டிடத்திற்குள் ஆத்மா ஒன்று பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

சம்பந்தம் இல்லாமல் ஒரு கிழவியும், சித்தர் போன்று ஒருவரும் அந்தக் கட்டடத்தில் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வாழ்ந்து வருகிறார்கள்.

கடைசியில் பார்த்தால் ரக்ஷிதாவை சந்தித்த ஸ்வேதா பிளாட்டில் யாருமே குடியிருக்கவில்லை என்பது தெரிகிறது.

சரி… இதிலென்ன வித்தியாசம் என்கிறீர்களா..? அந்த கட்டிடத்தில் வாழ்ந்து வரும் ஆத்மா நல்ல ஆத்மா என்பதுதான்.

அந்த ஆத்மா யாருடையது, அது ஏன் ரக்ஷிதாவை தோழியாக கொண்டது, கடைசியில் அது தன் பழியை தீர்த்துக் கொண்டதா என்பதெல்லாம் மீதிக் கதையில்.

ஓங்கு தாங்கான ரக்ஷிதா மகாலட்சுமிக்கு அதற்குண்டான பாத்திரம் இல்லை என்றாலும் அவர்தான் கதையை தாங்கிச் செல்கிறார். காதல் கணவன் மேல் உயிரையே வைத்திருந்தாலும் அவன் தன் உயிரை எடுக்க காத்திருப்பது தெரியாமல் வாழும் அவரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

ஆனால் ஸ்வேதாவின் ஆவி உள்ளே போகும் நேரங்களில் அவர் காட்டும் மிருக வெறி அட்டகாசம்.

அவரைவிட அற்புதமான பாத்திரம் ஸ்வேதாவுக்கு. புத்தரின் சக்தி பெற்ற அன்பு குழந்தையாக எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாராட்டி வாழும் அந்த பாத்திரத்தை ரசிக்கலாம். தன் சாவுக்கே காரணமான கணவனை பழி தீர்க்க வேண்டாம் என்று தன் தந்தையிடம் கேட்டுக் கொள்வதில் அவரது பொன்னான மனம் புரிகிறது.

அதிலும் அவரது பால்ய பருவத்தில் நடித்திருக்கும் சிறுமி கனிஷ்கா தெய்வக் குழந்தை போலவே தோன்றுகிறார். குழந்தையின் பிறந்த தினத்தன்று அம்மாதான் கேக் வெட்ட வேண்டும் என்பதற்கு அவள் சொல்லும் விளக்கம் அற்புதம்..!

ரக்ஷிதாவின் காதல் கணவனாக வரும் சபரிக்கு, ரக்ஷிதாவை தாங்கும் அளவுக்கான உடற்கட்டு இல்லாவிட்டாலும் கவர்கிறார்.

ஸ்வேதாவின் கணவனாக வரும் ரோகிந்த்துக்கு இரண்டு முகம் இருப்பதை யாராலும் நம்ப முடியாது.

ஆனால் அவரது நண்பர் பவன் கிருஷ்ணாவை பார்த்த உடனேயே வில்லன் என்பது எல்லோருக்கும் தெரிந்து விடும்.

எல்லா குழப்பங்களுக்கும் ஆறுதல் தரும் ஒரு சாமியாரிணி வேடத்தில் கே ஆர் விஜயா வருகிறார். அந்தக் காலத்தில் தெய்வமாகவே வந்தவர் இப்போது தெய்வ வாக்கு சொல்லி வருவது பொருத்தம்தான்.

சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ் அம்பானி சங்கர், முல்லை கோதண்டம் எல்லாம் நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்வது பெரிதாக எடுபடவில்லை.

சித்தராக வரும் பி.எல். தேனப்பனுக்கு ஓரளவு முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு கூட மூதாட்டி ஸ்ரீலேகாவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

ஆரம்பத்தில் சிறிய பாத்திரத்தில் வந்து, போகப் போக பெரிதாகி படத்தை முடித்து வைக்கிறார் பிளாட் ஓனராக வரும் இயக்குனர் எம் எஸ் மூர்த்தி.

ஸ்வேதாவின் தந்தையாக வரும் அவர் தன் மனைவி, மகள் பற்றி சொல்லும் கதை, கண்ணீர் காவியம்.

இயக்குனர், நடிகர் என்பதை எல்லாம் தாண்டி படத்தின் தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளராகவும் மட்டுமல்லாமல் எல்லா பாடல்களையும் எழுதி இருக்கும் பாடலாசிரியராகவும் இருப்பது ஆரோக்கியமான பங்களிப்பு.

அந்தப் பாடல்கள் கேட்கும் ரகமாகவும் அமைந்திருக்கின்றன. அதிலும் ‘புத்தம் சரணம் கச்சாமி’ பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது.

சேவிலோ ராஜாவின் ஒளிப்பதிவு வண்ணமயமாக பயமுறுத்துகிறது.

முதல் பாதிப் படத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால் இரண்டாவது பாதி படம் தெளிவாகவும், மனதை நெகிழ வைக்கவும் செய்கிறது.

பின் பாதியைப் போலவே முன்பாதியையும் கவனமாக திரைக்கதை ஆக்கியிருந்தால் முழுப் படத்தையும் ரசித்து இருக்கலாம்.

RATINGS : 3.5/5

PRO : BHUVAN SELVARAJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *