Atonement 2007 A beautiful, heartwarming movie, Love, war and guilt combine to create deep emotions in the mind

Atonement (2007) அழகான, நெஞ்சை நெகிழச் செய்யும் திரைப்படம். காதல், போர், குற்ற உணர்வு ஆகியவை ஒருங்கிணைந்து மனதில் ஆழமான உணர்வுகளை ஏற்படுத்துகிறது. இயக்குநர் ஜோ ரைட், யான் மெக்கிவான் எழுதிய நாவலை ஒவ்வொரு கட்டத்திலும் அற்புதமாக வடிவமைத்துள்ளார். படத்தில் ஒரு காட்சியிலிருந்து அடுத்தக் காட்சிக்கு நுழையும் அழகு அபாரமாக இருக்கிறது. புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமாய்த் திருப்புவது போன்ற ஓர் உணர்வு. இரண்டு காட்சிகளுக்குமிடையே உள்ள ஒரு நொடிப்பொழுது அவகாசம் நம்மைக் கதையை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ளச் செய்கிறது. அழகியல் நிறைந்த காட்சிகள், ஒளியமைப்பு, மனதை உருக்கும் இசை, மற்றும் ஜேம்ஸ் மெக்கவாய், கீரா நைட்லி, சயோர்ஸ் ரொனான்
ஆகியோரின் நடிப்பு, இவை அனைத்துமே படத்தை மேலும் மெருகேற்றுகின்றன.

குறிப்பாக, டங்கிர்க் போர்க் காட்சியின் நீண்ட ஒற்றை ஷாட் மற்றும் nonlinear storytelling முறை ஆகியவை திரைப்படத்தைக் கண்கவர் ஒன்றாக மாற்றுகின்றன. முடிவில் வரும் அதிர்ச்சிகரமான திருப்பம், படம் முடிந்த பிறகும் மனதில் நீங்காத வருத்தத்தைக் கொடுக்கிறது. Atonement ஒரு அழியாத காதல் கதை. வருத்தம், மற்றும் கடந்த காலத்தைத் திருத்த முடியாததின் வேதனை பற்றிய ஆழமான கலைப்பார்வை.

இப்படத்தில் என் மனத்திற்கு நெருக்கமான இரண்டு காட்சிகளைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்.

செசீலியாவைத் தேடி ராபி அவள் நூலகத்திற்குள் செல்லும் காட்சி. அவர்களுக்கிடையேயான அந்த லவ் மேக்கிங் காட்சி அழகானது. பல ஆண்டுகளாக அடக்கி வைத்திருந்த காதல்/ மோக உணர்வுகளின் வெளிப்பாடு. அதிலிருக்கும் அவசரம், ஏக்கம், வெறித்தனம் அனைத்தும் அக்காட்சியில் அப்பட்டமாக வெளிப்படும். நூலகத்தின் மங்கலான வெளிச்சம், பழமையான மர அலமாரியின் வண்ணம், மற்றும் கேமராவின் மெதுவான நகர்வு இவை அனைத்தும் அந்தத் தருணத்திற்கான ஆழ்ந்த உணர்வை உருவாக்கியிருக்கும்.

அடுத்தது, இப்படத்தின் கதையையே திசைதிருப்பும் முக்கியமான ஒரு காட்சி. ஆனால் அது மிகச் சிறிய ஒரு காட்சியாக அமைந்திருக்கும். அது ஒரு கூர் கத்தி உராய்தலைப் போல இருக்கும். அதில் ஒரு தனி அழகும் மிடுக்குத்தனமும் தென்படும்.

நிச்சயம் பார்க்க வேண்டியப் படம்.

Leave a Response