Viduthalai 2 Review Tamil : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் வெற்றிமாறன் சூரியை கதாநாயகனாக வைத்து “விடுதலை” என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார்.
இளையராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்தன. “விடுதலை” படத்தை தொடர்ந்து அதன் 2ம் பாகம் வெளியாகும் என முன்னரே பட குழுவினர் அறிவித்திருந்தனர். அதன் பின்னர் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது.
இந்த 2ம் பாகத்தில், நடிகை மஞ்சு வாரியர், அனுராக் கஷ்யப் மற்றும் கிஷோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். முதல் பாகத்தின் முடிவில் குமரேசனால் (சூரி) வாத்தியார் (விஜய் சேதுபதி) கைது செய்யப்படும் நிலையில், அதன் தொடர்ச்சியாக 2ம் பாகம் உருவாகியுள்ளது.
2-ம் பாகத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராக மாறுவதற்கு பின்னால் என்ன நடந்தது? சிறையில் இருந்து எவ்வாறு தப்பித்தார்? போன்ற பிளாஷ்பேக் காட்சிகளை பிரதானமாக கொண்டு உருவாகியுள்ளது. மேலும் மஞ்சு வாரியர், விஜய் சேதுபதிக்கு இடையேயான முக்கிய காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில், “விடுதலை 2” படத்தை பார்த்த சென்சார் குழு முதல் விமர்சனத்தை கூறியுள்ளது. அதன்படி, படத்தில் அதிகளவிலான ஆபாச வார்த்தைகளும் சர்ச்சைக்குரிய வசனங்களும் இருப்பதால் அந்த வசனங்களுக்கு மட்டும் மியூட் போடச்சொல்லி பரிந்துரைத்துள்ளனர்.
மேலும், முதல் பாகத்தை விட 2ம் பாகத்தில் அதிக அளவிலான வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. சென்சார் குழு “விடுதலை 2” படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தாலும் படத்தின் இயக்குநர் வெற்றிமாறனை படக்குழு பாராட்டியுள்ளது. படத்தில் பல காட்சிகள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், முதல் பாகத்தை விட 2-ம் பாகம் பெரியளவில் வெற்றிபெறும் என்று பாராட்டியுள்ளனர்.
ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நடந்த “விடுதலை 2” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
படத்தில் இடம் பெற்ற எல்லா கதாபாத்திரங்களும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து இருக்கின்றனர். சேத்தன் கதாபாத்திரம் காமெடிக்கு கேரண்டி. இரண்டாம் பாகத்தில் சூரி பெரிதாக தெரியவில்லை. மஞ்சு வாரியருக்கும், விஜய் சேதுபதிக்கான காதல் ரசிக்க வைக்கிறது.
காட்சிகள் சுவாரசியமாக, விறுவிறுப்பாக சென்றாலும், கம்யூனிசம் பாதையில் இடம்பெற்ற அதிகபட்ச வசனங்கள் தோய்வை கொடுக்கின்றன. இளையராஜா இன்னும் தரமான பின்னணி இசையை கொடுத்திருக்க வேண்டும். வழக்கம் போல வெற்றி மாறன் படத்தில் இடம்பெறும் டப்பிங் பிரச்சினை இந்த படத்திலும் இருக்கிறது.
சேதுபதி, சூரி நடிப்பில் வெளியாகியிருக்கும் விடுதலை 2 படத்தின் விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.
கரு :
விடுதலை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் தொடர்கிறது. முதல் பாகத்தில் வாத்தியராக இருக்கும் விஜய் சேதுபதி கைது செய்யப்படுகிறார். அதன் தொடர்ச்சியாக அவரை மலையில் இருந்து போலீஸ் அதிகாரி சேத்தன் மற்றும் சூரி உள்ளிட்ட காவல் துறையினர் கீலே அழைத்து வருகிறார்கள். செல்லும் வழியில் விஜய் சேதுபதி தான் எப்படி மக்கள் படை தலைவனாக மாறினார் என்பதை சொல்லிக் கொண்டே வருகிறார். மேலும் விஜய் சேதுபதியின் கூட்டாளிகள் அவரை விடுவிக்க திட்டம் போடுகிறார்கள்.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விஜய் சேதுபதி, வாத்தியாராக வாழ்ந்து இருக்கிறார். கெட்டதை தட்டி கேட்க ஆரம்பித்து, கட்சியில் இணைந்து மக்களுக்காக போராடும் தலைவனாக மாறி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்து இருக்கும் மஞ்சு வாரியர், தவறு செய்யும் தன் குடும்பத்தை, எதிர்த்து போராடும் துணிச்சலான பெண்ணாக நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார். குறிப்பாக விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் காதல் காட்சிகள் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. போலீசாக வரும் சூரிக்கு இந்த பாகத்தில் அதிகம் வேலை இல்லை. இருப்பினும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். விஜய் சேதுபதியை பிடித்து கொடுத்து தவறு செய்து விட்டோம் என்று உணரும் காட்சியில் கவர்ந்து இருக்கிறார். பவானி ஶ்ரீயும் குறைந்த காட்சிகளில் மட்டுமே வந்து சென்று இருக்கிறார்.
இறுதியில் விஜய் சேதுபதியை காவல் துறையினர் கீழே அழைத்து வந்து ஜெயிலில் அடைத்தார்களா? விஜய் சேதுபதியை அவரது கூட்டாளிகள் காப்பாற்றினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இயக்கம்
விடுதலை முதல் பாகத்தில் சூரி, பவானி ஸ்ரீ காதல் போலீஸ் காம்பில் நடக்கும் அநியாயம் விஜய் சேதுபதியை தேடும் வேட்டை ஆகியவற்றை படமாக்கி இருந்தார். ஆனால் இந்த பாகத்தில் விஜய் விஜயசேதுபதி எப்படி வாத்தியாராக மாறினார் மக்களுக்கான போராட்டம், அதிகார வர்க்கத்தினர் ஆளுமை அரசியல் என திரைக்கதை அமைத்து இருக்கிறார். மக்களுக்கான போராட்டத்தில் மக்கள் தான் இறங்கி போராட வேண்டும் என்று இறுதியில் சொல்லிருப்பது பாராட்டுக்குரியது.
ஒளிப்பதிவு
வேல் ராஜின் ஒளிப்பதிவு காடு, மலை ஆகியவற்றை அழகாக படம் பிடித்து இருக்கிறது. குறிப்பாக சண்டை காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்.
இசை
இளையராஜாவின் இசை படத்திற்கு பலம் பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார்.
Ratings : 4/5



