சாலா திரைப்படத்தின் விமர்சனம்:
பாருக்காக நடக்கும் போர் என்ற எளிமையான ஒன்லைனில் தாறுமாறாய் குடி திரும்பிய பக்கமெல்லாம் அடிதடி என போதை தூக்கலான சாலா. குடிப்பழக்கத்தால் சமூகம் சந்திக்கும் பேராபத்துகளை விவரித்து விழிப்புணர்வுப் பாடம் நடத்தும் படங்களின் விரிகையில் இணைகிற மற்றொரு படம். கதை நிகழ்விடம் விட சென்னை ராயபுரம்.
1969-ல் கைவிட்டுப்போன ஒயின்ஷாப் பாரை கைப்பற்ற ஒருதரப்புகேஸ் அது இதுவென மல்லுக்கட்டிக் கொண்டு எதிர் தரப்பு தருகிற பல்வேறு குடைச்சல்களையும் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை, இப்படி தொடங்கும் கதை போலி மதுபான தயாரிப்பு, இரு தரப்பு மோதலில் வெட்டுக்குத்து உயிர் பலி, ஊரில் பார் அதிகரிக்க வேண்டும் என நினைக்கும் நாயகனுக்கு மதுவை ஒழிக்க மக்களைத் திரட்டி போராடும் பெண் மீது மலரும் காதல் என சுற்றில் சுழல்வதில் சுறுசுறுப்புக்கு பஞ்சமில்லை. கேஸ் யார் பக்கம் சாதகமானது? மதுவை ஒழிக்கப் போராடும் பெண்சாதித்தது என்ன? எதிரெதிர் மனநிலையில் உள்ளவர்களின் காதல் என்னவானது? என்பதற்கெல்லாம் பதில் தருகிறது இயக்குநர் எஸ்.டி. மணிபால் அமைந்திருக்கும் ஸ்கிரீன்பிளே.
மலைக்க வைக்கும் உயரமும் மலை போல் விரிந்து பரந்த தேகமுமாய் விளைவு எதுவானாலும் பரவாயில்லை மோதிப் பார்த்துவிடலாம் என வெறியேறிய வீரனாய் திரிகிற வேடத்தில் அறிமுக நாயகன் தீரன். கதைப்படி ஹீரோ என்றாலும் சுயலாபத்துக்காத வில்லன்கள் செய்கிற எல்லா அநியாய அக்கிரமங்களையும் செய்யும்படியான கதாபாத்திரம். அதையெல்லாம் தேவைக்கேற்ற ஆத்திரத்தோடும் பொருத்தமான சீற்றத்தோடும் செய்திருப்பவர் காதல்வியப்படுவது தான் அண்ணனாக மதிப்பவரையும் காதலியையும் ரத்த வெள்ளத்தில் பார்க்கும்போது மனம் உடைவது என வேறொரு பரிமாணத்தையும் தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.
பாரில் சலுகைகள் அறிவித்து ஊர் முழுக்க ஒட்டப்பட்ட போஸ்ட்ர்களை கிழிப்பது. மக்களையும் மாணவர்களையும் சேர்த்துக் கொண்டு மதுவுக்கெதிராக போராடுவது என தனக்கான பங்களிப்பை நேர்த்தியாக செய்திருக்கிறார் அழகும் இளமையுமாக வலம் வருகிற ரேஷ்மா வெஸ்கடேஷ். பாரை கைப்பற்றத் துடிப்பவராக அருள்தாஸ் போலி மதுபான தயாரிப்பில் ஈடுபடுபவராக சார்லஸ் வினோத், பண பலத்துக்கு பணிந்து போகும் காவல்துறை உயரதிகாரியாக சம்பத்ராம் என கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான தேர்ந்த நடிகர்களை படம் முழுக்க பார்க்க முடிகிறது.
பள்ளிப் படிப்பின்போதே மதுபிரியர்களாகி சீரழிபவர்களாக வருகிற மூன்றுபேரின் துடிப்பான நடிப்பு கவர்கிறது. அவர்களுக்கு நேரும் முடிவு அதிர்ச்சி தருகிறது. பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு பரபரப்புத் தீ மூட்டும் வேலையை கச்சிதமாத செய்திருக்கிறார் தீசன். படத்தில் புதிதாய் எதுவும் சொல்லவில்லை திரைக்கதையும் பெரிதாய் ஈர்க்கவில்லை என்றாலும் மதுப்பழக்கம் மக்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதை எடுத்துகாட்டியிருப்பதற்காக சாலா படக்குழுவை சால்வை போர்த்திப் பாராட்டலாம்.
Ratings : 2 /5




