நாயகன் ஹரிஷ், டாஸ்மாக் பார் நடத்தி வருவதோடு ‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற அமைப்பை தொடங்கி அதற்கு தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். பொதுவாக பார் நடத்துபவர்கள் அனைத்து பணிகளும் முடிந்த பிறகே மது அருந்துவார்கள், ஆனால் நாயகன் ஹரிஷ், அவரது பாரை திறப்பதற்கு முன்பாகவே மது குடிக்கிறார். எந்த நேரத்திலும் போதையிலேயே இருக்கும் அவரை மருத்துவம் படிக்கும் நாயகி தனலக்ஷ்மி காதலிக்கிறார்.
நாயகன் ஹரிஷ் மற்றும் அவரது நண்பர்கள் எந்த நேரமும் மது போதையில் இருப்பதோடு, மது பழக்கத்தால் பலர் பல வகையில் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், அது பற்றி துளியும் கவலைப்படமால் மது குடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் அவர்களை திருத்த அவர்களது குடும்பத்தார் பல வகையில் முயற்சி செய்தும் முடியாமல் போய் விடுகிறது.
இதற்கிடையே, இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது. மது பிரியர்களும், மதுவுக்கு அடிமையானவர்களும் மது கிடைக்காமல் தவிப்பதோடு, மாற்று வழியை தேடி அலைகிறார்கள். ஒரு கட்டத்தில் என்ன முயற்சி செய்தாலும் மீண்டும் மது அருந்த முடியாது, என்பதை புரிந்துக் கொள்பவர்கள், மதுப்பழக்கத்தை மறந்து விட்டு வாழ தொடங்குகிறார்கள். இதனால், அவர்களது குடும்பத்தில் மகிழ்ச்சி திரும்ப, சமூகத்தில் அவர்களுக்கான மரியாதையும் கிடைக்கிறது.
அனைத்தும் சரியாகி விட்டது என்று அனைவரும் மகிழ்ச்சியில் இருக்க மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கான சூழல் அமைகிறது. மதுப்பழக்கத்தை மறந்த நாயகன் மற்றும் பலர் மீண்டும் அந்த பழக்கத்தில் மூழ்கினார்களா ? அல்லது திருந்தி வாழும் வாழ்க்கையை தொடர்ந்தார்களா ? என்பதை சமூக பொறுப்புடன் சொல்வது தான் ‘நல்ல படம்’.
நாயகனாக நடித்திருக்கும் டாக்டர்.ஏ.ஹரிஷ், கல்லூரி மாணவர் போல் இளமையாக இருப்பதால், மது பிரியர் மற்றும் மதுக்கூடம் உரிமையாளர் கதாபாத்திரத்தில் ஒட்டாமல் பயணிக்கிறார். அதே சமயம், தனது கதாபாத்திரத்திற்கான நடிப்பை சரியான முறையில் வெளிப்படுத்தியிருப்பவர்,காமெடி காட்சிகளை கச்சிதமாக கையாண்டு சிரிக்க வைப்பதோடு, காதல் மற்றும் பாடல் காட்சிகளில் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். தனக்கு பொருந்தும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் தமிழ் சினிமா ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடிப்பார்.
நாயகியாக நடித்திருக்கும் தனலக்ஷ்மி, மது பிரியராக இருந்தாலும் ஹீரோவை விரட்டி விரட்டி காதலிக்கும் கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார். பாடல் காட்சிகளில் கூடுதல் அழகோடு வலம் வருகிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் கல்கி ராஜா, காமெடி காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். தனக்கான தனித்துவமான செயல்பாடுகள், வசன உச்சரிப்பு மற்றும் மைண்ட் வாய்ஸ் மூலம் சிரிக்க வைக்கிறார்.
மொட்டா ராஜேந்திரன், ரமா, பிரியதர்ஷினி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களுக்கான வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ.ஹரிஷ், கதைக்கு தேவையான விதத்தில் பணியாற்றியிருக்கிறார். வசனக் காட்சிகள் எளிமையாக இருந்தாலும், பாடல் காட்சியை இளமையாக படமாக்கி பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
சஹிஷ்னா சேவியர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. படத்தொகுப்பாளர் பி.ஆர்.பிரகாஷின் பணியிலும் குறையில்லை.
எழுதி இயக்கியிருக்கும் பிரபுராம்.சி, தற்போதைய காலக்கட்டத்தில் மக்களிடம் அதிகரித்திருக்கும் மதுப்பழக்கத்தை மறக்கடிப்பதற்கான தீர்வை சொல்லியிருக்கிறார்.
”மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு” என்ற வாக்கியத்துடன் மது பாட்டில்களை விற்பனை செய்யும் அரசு, அந்த மதுக்கடைகளை முழுவதுமாக மூடினால் தான், மதுப்பழகத்தில் மூழ்கியிருக்கும் மக்களை மீட்டெடுக்க முடியும், என்பதை இயக்குநர் பிரபுராம்.சி, அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
ஒரு திரைப்படமாக சிறு முதலீட்டில் தான் சொல்ல நினைத்ததை சற்று சொதப்பலாக சொல்லியிருந்தாலும், சமூக பொறுப்புடன், நாட்டுக்கு மிக அவசியமான ஒரு கருத்தை, கமர்ஷியலாகவும், காமெடியாகவும் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் பிரபுராம்.சி, தயாரிப்பாளர் ஏ.அழகு பாண்டியன், நாயகன் ஹரிஷ் ஆகியோரை மனதார பாராட்டலாம்.
மொத்தத்தில், ‘நல்ல படம்’ படமாக மக்களை கவரவில்லை என்றாலும் ஒரு பாடமாக நிச்சயம் மக்களை யோசிக்க வைக்கும்.
RATINGS : 3/5
PRO : D’one




