Kuzhanthaigal Munnetra Kazhagam Movie Review

அரசியல்வாதியான யோகி பாபுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் போது, வீட்டில் வேலை செய்ய வந்த வடமாநில பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்கிறார். இதனால் அவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது. அதனால் அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார்கள். அவரது மகன் தனது தந்தையைப் போல் தானும் அரசியல்வாதியாகி ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்ற ஆசையோடு வளர்கிறார். மூத்த மனைவியின் மகனும் அரசியலில் தந்தையை விட பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார். இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படிக்க, பள்ளிக் காலம் முதலே, தலைவர், விளம்பரம், தேர்தல், சதி என்று அரசியல்வாதிகளுக்கான அம்சங்களுடன் வளர்கிறார்கள். இவர்கள் நினைத்தது போல் இவர்களது எதிர்காலம் அமைந்ததா?, இல்லையா? என்பதை தமிழக அரசியலையும், குடும்ப அரசியலையும் மையமாக வைத்துக் கொண்டு நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’.

யோகி பாபு கதையின் நாயகனாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், படத்தின் சில இடங்களில் திடீர் திடீரென்று தலைக்காட்டி மறைகிறார். இதனால், பல இடங்களில் அவரை ஒட்ட வைத்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. யோகி பாபு வழக்கம் போல், உடல் கேலி செய்து சிரிக்க வைக்க முயற்சித்து சில இடங்களில் வெற்றி பெற்றாலும், பல இடங்களில் அவரது காமெடிக் காட்சிகள் கடியாக மாறி வலியை கொடுக்கிறது.

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் இமய வர்மன் மற்றும் அத்வைத் ஜெய் மஸ்தான் இருவரும் கேமரா பயம் இல்லாமல் மிக தைரியமாக நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கான சில காட்சிகள் அவர்களது வயதை மீறியதாக இருந்தாலும், அதில் எந்தவித தடுமாற்றமும் இன்றி மிக தெளிவாக நடித்திருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை நினைவு கூர்வது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் சிறுமி ஹரிகா பெடடாவின் திரை இருப்பும், நடிப்பும் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வெள்ளித்திரையில் முகம் காட்டியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், அரசியல் கட்சித் தலைவராக நடிப்பில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். அவரது காட்சிகளில் காமெடி இல்லை என்றாலும், ”எத்தனை பேர் வந்து உடைத்தாலும் இறுதியில் காணாமல் போவது அவர்கள் தான், என் கட்சி இல்லை” என்ற அவரது வசனத்தை சாதாரணமாக பேசி கைதட்டல் பெற்றுவிடுகிறார்.

சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வைகா ரோஸ், அஸ்மிதா சிங், லிஸி ஆண்டனி, சரவணன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் அவர்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

சாதகப் பறவைகள் சங்கரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் ஜெ.லக்‌ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவிலும் குறையில்லை. படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.ஏ, முடிந்த அளவுக்கு வெட்டி, ஒட்டி முழு படமாக கொடுத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் என்.சங்கர் தயாள், தமிழக போட்டி அரசியல் மற்றும் குடும்ப அரசியலை, சிறுவர்கள் மூலம் நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.

இயக்குநரின் அரசியல் நையாண்டிகள் காட்சிகள் மூலம் புரிந்தாலும், அதில் இருந்த நகைச்சுவை தான் பெரிதாக எடுபடவில்லை. குறிப்பாக யோகி பாபுவை படம் முழுவதும் வருவது போல் காட்டுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்திருக்கிறது.

சிறுவர்களிடம் வேலை வாங்கிய விதம் மற்றும் பள்ளி மாணவர் தலைவர் தேர்தல் மூலம் அவர்களுக்கிடையே ஏற்படும் போட்டி, அதில் நடக்கும் சதி, ஏமாற்றம், அதை தொடர்ந்து இரண்டு சிறுவர்களின் அரசியல் எதிர்காலம் ஆகியவற்றை நகைச்சுவையாக சொல்லி பார்வையாளர்களை சிரிக்க வைத்து விடுகிறார் இயக்குநர் என்.சங்கர் தயாள்.

மொத்தத்தில், ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ குறைகள் இருந்தாலும் சிரிக்கலாம்.

Ratings : 2/5

Leave a Response